“சமரசமில்லா
வர்க்கப் போராளி” தோழர். IPF செல்வராஜ் அவர்கள்
24-04-1962ல் பிறந்தார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று பின்னர் என்.எல்.சி. நிறுவனத்தில் தீயணைப்பு துறையில் பணியாற்றிய திரு. முனுசாமி- திருமதி. நாகம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகனாவார் தோழர். செல்வராஜ்.
24-04-1962ல் பிறந்தார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று பின்னர் என்.எல்.சி. நிறுவனத்தில் தீயணைப்பு துறையில் பணியாற்றிய திரு. முனுசாமி- திருமதி. நாகம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகனாவார் தோழர். செல்வராஜ்.
நெய்வேலியில் பள்ளியில் படிக்கும்பொழுதே மாணவர்
போராட்டங்களில் முன்னணிப் பங்காற்றினார். கருத்த நிறத்திற்கும் கரகரப்பான குரலுக்கும்
சொந்தக்காரரான அவர் கடலூரில் ITIல் படிக்கும்பொழுதே மாணவர் போராட்டங்களுக்கு தலைமை
தாங்கினார். பின்னர் என்.எல்.சி. நிறுவனத்தில் தொழில் நுட்ப பயிற்சி முடித்தார்.
தனது 20 வது வயதில் புரட்சிகர கருத்துக்களால்
ஈர்க்கப்பட்டு உறுப்பினரானார். பின்னர் அக்கட்சியின் வெகுஜன முன்னணியான தமிழக மக்கள்
முன்னணியில் முக்கிய பங்காற்றினார். பின்னர் இந்திய மக்கள் முன்னணி (INDIAN
PEOPLES FRONT) (IPF) மற்றும் தமிழக இளைஞர் இயக்கம் ஆகியவற்றில் மாவட்ட,
மாநில பொறுப்புகளை வகித்து பல மக்கள் போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்.
குறிப்பாக, பண்ருட்டி, அங்குசெட்டிபாளையத்தில்
ஒரு நிலப்பிரபுவின் வசம் இருந்த அரசு புறம்போக்கு நிலங்களை பறிமுதல் செய்து நிலமில்லா
ஏழைகளுக்கு வீட்டுமனைகளாக பிரித்து கொடுத்த இயக்கத்தில் போர்குணத்துடன் பங்கேற்றார்.
நெய்வேலியில் பகுதிப்பிரச்சனைகளுக்காகவும், மக்கள்
மீதான அடக்குமுறைகளுக்கெதிராகவும், தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்களையும்,
பேரணிகளையும் தலைமை தாங்கிநடத்தினார்.
‘உணர்வுகள்’, ‘யதார்த்தம்’, ‘சுரங்கம்’
போன்ற பத்திரிகைகளை நடத்தி இளைஞர்கள், இளந்தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகர அரசியல்
பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
1980
களில் என்.எல்.சி. நிறுவனத்தில் இரண்டாம் சுரங்கமும் மற்றும் இரண்டாம் அனல்மின் நிலையமும்
துவங்கப்பட்டபோது நெய்வேலி பகுதியில் இருந்த பல கிராமங்களும், விளைநிலங்களும் சொற்ப
தொகை இழப்பீடாக கொடுக்கப்பட்டு வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டன. அதிக தொகை இழப்பீடாகக்கேட்டும்,
வீட்டுகொருவருக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை, மாற்றுக்குடியிருப்பு மனை வழங்கக்கோரியும்
நடைபெற்ற வாழ்வாதாரத்தை இழந்த அம்மக்களின் போராட்டங்களில் பங்கேற்று அவர்களின் கோரிக்கைகள்
நிறைவேற பாடுபட்டார்.
05.01.1987 ல் என்.எல்.சி. நிறுவனத்தில்
இரண்டாம் அனல்மின் நிலையத்தில் நிரந்தரப் பணியில் சேர்ந்தார்.
அக்கால கட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்தின்
இரண்டாம் சுரங்கத்திலும், இரண்டாம் அனல்மின் நிலையத்திலும் ITI படித்த ஆயிரக்கணக்கான
இளைஞர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பணியில் அமர்த்தப்பட்டார்கள்.
அவர்கள் மிக்க்குறைந்த ஊதியத்தில் இரண்டாண்டு பயிற்சி என்ற அடிமை முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
வெகுண்டெழுந்த அவ்விளந்தொழிலாளர்கள், வழமையான தொழிற்சங்கங்கள் தங்கள் இழிநிலையை கண்டுகொள்ளாத
சூழ்நிலையில் தங்களுக்கென ஒரு தொழிற்சங்கத்தை அமைத்துக்கொண்டு போர்குணமிக்க, வீரம்செறிந்த
பல போராட்டங்களை நடத்தி, பின்னர் அச்சங்கத்தை HMS தொழிற்சங்கத்துடன் இணைத்தார்கள்.
தனது கட்சியின் சார்பில் தொழிற்சங்கம் எதுவும்
அக்காலகட்டத்தில் இல்லாத நிலையில் தோழர். செல்வராஜ், HMS தொழிற்சங்கத்தில் உறுப்பினரானார்.
பலபோராடங்களில் பங்கேற்றார். அத்தொழிற்சங்கம் ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் போன்ற நிலையை
அடைந்தது. என்.எல்.சி. நிர்வாகம் கண்டு அஞ்சுகின்ற வகையில் இரண்டாம் அனல்மின் நிலைய
தொழிலாளர்களின், தன்னிகரற்ற போராட்டத் தலைவனாக தோழர். செல்வராஜ் விளங்கினார்.
அவரோடு செல்வராஜ் என்ற பெயரில் பல தொழிலாளர்கள்
பணியாற்றியதால் அவரை தொழிலாளர்கள் அடையாளப்படுத்த IPF செல்வராஜ் .என்றும் IPF என்றும்
அழைக்கத்தொடங்கினர்.
என்.எல்.சி. நிர்வாகம், அவரை பலமுறை தற்காலிக
பணிநீக்கம் செய்தது.தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அஞ்சி அவற்றை திரும்பப்பெற்றது.
அவரை ஒன்றும் செய்யமுடியாத நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் காவல்துறை, பொய்யான கொலை
முயற்சி வழக்கொன்றில் அவரை கைது செய்து சிறையிலடைத்தது. அதன் காரணமாக நிர்வாகம் அவரை
தற்காலிக பணிநீக்கம் செய்ததது. தோழர். செல்வராஜ், நிபந்தனை பிணையில் சிலகாலம் சீர்காழியில்
தங்கியிருந்தார். அங்கே அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளராகயிருந்த தோழர்.
குணசேகரன் அவர்களை சந்தித்து கட்சிக்கு அடித்தளமிட்டார். நீதிமன்றம் அவரை நிரபராதியென
தீர்ப்பளித்தது. தற்காலிக பணிக்காலத்தில் இழந்த ஊதியமனைத்தையும் மொத்தமாகப்பெற்று மீண்டும்
பணியில் அமர்ந்தார். அதனால் அவருடைய செல்வாக்கு தொழிலாளர்கள் அதிகாரிகள் மத்தியில்
பன்மடங்கு உயர்ந்தது.
.HMS சங்கம் நடத்திய வெற்றிகரமான, மிகப்பெரிய,
வேலைநிறுத்தத்தின் காரணமாக நிர்வாகத்தால் பேச்சுவார்த்தை சங்கமாக அங்கீகரிக்கப்பட்டது.
அப்போது தலைமைப்பொறுப்பிலிருந்தவர்களின் சந்தர்ப்பவாத, சமரசப்போக்கின் காரணமாக மூன்று
பிரிவுகளாக பிளவுண்டு, ஒரு பெரும்பிரிவினர் தி.மு.க வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில்
இணந்தனர். தோழர். செல்வராஜ், தனது புரட்சிகர அணிகளோடு வெளியேறினார். அப்போது தாழ்த்தப்பட்டோர் சங்கமும், கட்சியும் அவரை
அழைத்தன. அவற்றையெல்லாம் ஏற்காமல் தனது கட்சியால் நிறுவப்பட்ட AICCTU சங்கத்தை நெய்வேலியில் துவங்கி அதன் முதல் தலைவரானார்.
அவரது சங்கம், சிறிய சங்கமாக இருந்தாலும், பெரிய சங்கங்களால் சாதிக்க முடியாத பல சாதனைகளை
படைத்து நெய்வேலி தொழிற்சங்க இயக்கத்தின் போக்கை மாற்றியமைத்தது.
என்.எல்.சி. நிறுவனமே துவங்குவதாக இருந்த
ஜீரோ யூனிட் அனல்மின் நிலையத்தை தனியார் துவங்க அனுமதி வழங்கப்பட்டபோது அதனை எதிர்த்து
தனியார்மய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை நடத்தியது.
என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளின் சிறிய
பகுதியை அதன் பணியாளர்களுக்கே மத்திய அரசு விற்பனை செய்தபோது அது தனியார்மயத்தின் முதல்படி
என்றுகூறி, பங்குகளை வாங்கவேண்டாம் என தொழிலாளர் மத்தியில் வேண்டுகோள்விடுத்து பங்குவிற்பனைக்கு
எதிராக இயக்கம் நடத்தியது.
ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிலாளர்கள்
தங்களுக்காக நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய சங்கங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்
என்ற கோரிக்கையை முன்வைத்து இரண்டாண்டு காலம் மாபெரும் கூட்டியக்கத்தை நடத்தி, நீதிமன்ற
உத்தரவு பெற்று முதல் ரகசிய வாக்கெடுப்பு நடைபெறச்செய்து வரலாறு படைத்தது.
அவ்வியக்கம் நடைபெறும் போது ஓராண்டு காலத்திற்கும்
மேலாக தோழர். செல்வராஜ் அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு பிறகு மீண்டும் பணியிலமர்ந்தார்.
தோழர். செல்வராஜை தற்காலிக பணிநீக்கம் செய்ய
காரணமாக இருந்த நிர்வாகத்துறை இயக்குனர் நரசிம்மனின் ஊழல் நடவடிக்கைகளுக்கெதிராக இயக்கம்
நடத்தி அவரை என்.எல்.சியை விட்டு வெளியேரச்செய்தது.
என்.எல்.சி. நிறுவனத்தின் பங்களிப்பு இன்றி
பணியாளர்களிடம் மட்டுமே பணம் பிடித்தம் செய்து உருவாக்கப்பட்ட என்.எல்.சி. ஓய்வூதிய
திட்டத்திற்கெதிராக இயக்கம் நடத்தி, நீதிமன்ற உத்தரவு மூலம் பிடித்தம் செய்த தொகையை
திருப்பித்தர வைத்ததது.
என்.எல்.சி. தொழிலாளர்கள் குடும்பத்தோடு
அகில இந்திய சுற்றுலா (LTC) செல்ல அனுமதிக்கப்பட்ட தொகையை, முறைகேடாக சென்றார்கள் என்று
கூறி நிர்வாகம் பணம் பிடித்தம் செய்ததது, பணம் பிடித்தத்திற்கு நீதிமன்றத்தில் தடை
உத்தரவு பெற்றது.
ரகசிய வாகெடுப்பின்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட
ஒருசங்கப் பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் தோழமை சங்கங்களோடு மீண்டும் நீதிமன்றம்
சென்று 51% வாக்குகள் வரை பெறும் சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவேண்டுமென்றும்,
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படவேண்டுமென்றும் உத்தரவைப் பெற்று பல சங்க
பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தது.
மேலும் தொழிற்சங்கங்களோடு சேர்ந்து போராடி
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8.33% குறைந்த பட்ச போனஸ் பெற்றுத்தந்தது.
என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்க
மத்திய அரசு முயற்சித்தபோது, அனைத்து சங்கங்களோடு முன்னணியில் நின்று, வேலைநிறுத்தம்
நடத்தி, தனியார் மயத்தை தடுத்து நிறுத்தியது.
மத்திய தொழிலக பாதுகாப்பு படையை என்.எல்.சி.
நிறுவனத்தில் அனுமதித்த்தற்கு எதிரான இயக்கம்,துரோகமான ஊதியமாற்று ஒப்பந்தங்களுக்கு
எதிரான, அதிகாரிகளுக்கு இணையான ஊக்க ஊதியம், போனசுக்கான கூட்டுப்போராட்டங்கள் என, அதன்
பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
தோழர். செல்வராஜ் கடலூர் மாவட்ட கட்சியின்
செயலாளராகவும், தொழிற்சங்க செயலாளராகவும் தொடர்ந்து பணியாற்றினார்.
அவருடைய சமூக சேவையைப் பாராட்டி, தலித் சாகித்ய அக்காடமி,
அவருக்கு அம்பேத்கர் விருது வழங்கி கவுரவித்தது.
தான் சார்ந்த கட்சியில் தலைதூக்கிய வலது
சந்தர்ப்பவாத, அரைஅராஜகவாத, சிறுமுதலாளித்துவ தலைமையின், குறுங்குழுவாத கருத்தியலிக்கு
எதிராக போராடி, பெரும்பான்மையான உறுப்பினர்கள், தலைவர்களோடு, வெளியேறி, இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலையை துவங்க, முக்கிய பங்காற்றினார்.
அக்கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.
நெய்வேலி தொழிற்சங்கத்தை கட்சியின் ஜனநாயக தொழிர்சங்க மையத்துடன் (DTUC) இணைத்தார்.
என்.எல்.சி. நிறுவனத்தின் விரிவாக்கத்திட்டத்தில்
நடைபெற்ற, ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் குறித்து என்.எல்.சி. நிறுவனத்தின் தலைவர்
அன்சாரி மற்றும் உயரதிகாரிகளை சுட்டிக்காட்டும் வகையில் 12-11-2009ல் “தமிழக அரசியல்”
பத்தித்திரிகையில் வெளி வந்த செய்தியை படித்த அப்பாவி தொழிலாளர்கள் 6 பேரை தற்காலிக
பணிநீக்கம் செய்த்தற்கெதிராக தொழிற்சங்கங்கள் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தி, பணிநீக்க
உத்தரவை திரும்பப்பெறச்செய்து தங்கள் கடமையை அத்தோடு முடித்துகொண்டன.
என்.எல்.சி. தலைவர் அன்சாரியின், பணியாளர்கள்
மீதான பழிவாங்கும் அடக்குமுறைக்கெதிராகவும், ஊழல் முறைகேடுகளுக்கெதிராகவும், கட்சிய்யின்
சார்பாக தோழமை அமைப்புகளோடு சேர்ந்து, ஊழல் எதிர்ப்பு முன்னணியை உருவாக்கினார். அம்முன்னணி
மூலம் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றியதற்காக ஓராண்டு காலத்திற்குமேல்
தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாமல் ஊழலுக்கெதிராக CBI விசாரணை கோரி உயர்நீதிமன்றதில் DTUC சார்பாக
வழக்கு தொடுத்தார்.
அதைக்கண்டு அஞ்சிய நிர்வாகம், தோழர். செல்வராஜை,
என்.எல்.சி. நிறுவனத்திலிருந்து, 28.05.2011ல் பணிநீக்கம் செய்தது. அவரது பணிநீக்கத்திற்கெதிரான
வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
தோழர். செல்வராஜ், சென்னை CBI சிறப்புநீதிமன்றத்தில்,
என்.எல்.சி. தலைவர் அன்சாரியின் மீது 10000 கோடி ஊழலை விசாரிக்கக்கோரி, தனிநபர் புக்காரை
பதிவுசெய்தார். வரலாற்றிலேயே முதல் முறையாக, அவரது தனிநபர் புகாரை ஏற்றுக்கொண்ட, சென்னை
CBI சிறப்புநீதிமன்றம், அன்சாரி மீது FIR பதிவு
செய்து, புகாரை விசாரித்து, அறிக்கையளிக்குமாறு CBIக்கு உத்தரவிட்டது.
மேற்கண்ட உத்தரவிற்கெதிராக, அன்சாரி தன்
செல்வாக்கை பயன்படுத்தி இடக்கால தடை பெற்றார்.
தடையை நீக்குவதற்கு தோழர். செல்வராஜ் எடுத்த
நடவடிக்கை காரணமாக, வழக்கு விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
28.05.2012 அன்று மாலை நெய்வேலியில் இரண்டு
சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தோழர். செல்வராஜ், மர்மமான முறையில் சாலை விபத்திற்குள்ளகி,
பலத்த தலைக்காயத்துடன், சுய உணர்விழந்த நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றுவந்தார்.
தங்கள் உரிமைகளுக்காக தன்னலம் கருதாமல் போராடி
வந்த தன்னிகரில்லா தலைவனை எப்படியாவது காப்பாற்றுவதற்காக, அவருடைய மருத்துவச் செலவுக்காக,
என்.எல்.சி. தொழிலாளர்களும், அதிகாரிகளும் தாங்களாக முன்வந்து, என்.எல்.சி. வரலாறு
காணாத வகையில் ரூபாய் 6 லட்சத்தை மருத்துவ செலவுக்காக வசூல் செய்து கொடுத்தனர். அவருடைய
கட்சி மருத்துவ செலவுக்காக ரூபாய் 50000 கொடுத்த்தோடு, முக்கிய தலைவர்கள் 24 மணி நேரமும்
அவரோடு இருந்து, அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ஆனால் அவர் சுயநினைவிழந்த நிலையிலேயே
25.06.2012 அன்று காலை வீர மரணம் அடைந்தார்
வலதுசாரிகள் முதல் தீவிர இடதுசாரிகள் வரையிலான,
பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும்
கூட்டத்தில் கலந்துகொண்டு அவரை “சமரசமில்லா வர்க்கப் போராளி” என அழைத்து, தங்கள் வீரவணக்கத்தை
தெரிவித்துக்கொண்டனர். 26.06.2012 அன்று நெய்வேலியில் நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில்
நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் கட்சித்தோழர்களும் கலந்துகொண்டு, ஊழல் அன்சாரிக்கு
எதிராக ஆவேச முழக்கமிட்டு, தோழர். செல்வராஜிக்கு வீரவணக்கம் செய்தனர். அவருடைய இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியை
10.07.2012 அன்று நெய்வேலியில் நடத்தி, அவரை இழந்து வாடும், அவருடைய போராட்டங்கள் அனைத்திலும்
அவருக்கு ஊக்கமளித்து துணைநின்ற அவரது துணைவியார்
மற்றும் இரண்டு பெண்குழந்தைகளுக்கு ரூபாய் 1 லட்சத்தை நிதியாக வழங்கியது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அதிகாரிகளும்
சங்க, கட்சி வித்தியாசமின்றி, நெய்வேலி வரலாறு காணாதவகையில் ரூபாய் 11 லட்சத்திற்குமேல்
தோழர். செல்வராஜ் குடும்ப பாதுகாப்பு நிதியாக முன் வந்து அளித்தனர்.
06.10.2012 அன்று, நெய்வேலியில் நடைபெற்ற
தோழர். IPF செல்வராஜ் குடும்ப பாதுகாப்பு நிதியளிப்பு கூட்டத்தில் நூற்றுக்கணக்கான
தொழிலாளர்களும் அதிகாரிகளும் கட்சித் தோழர்களும் கலந்துகொண்டனர். அனைத்து சங்க தலைவர்களும்
தோழர். செல்வராஜுக்கு புகழாரம் சூட்டி, தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிதியை இ.க.க. (மா-லெ) மக்கள் விடுதலையின்
பொதுச்செயலாளர். தோழர். ஜே. சிதம்பரநாதன் அவர்களும் தொ.மு.ச பொதுச்செயலாளர் திரு. ராசவன்னியன்
அவர்களும் தோழர். செல்வராஜின் குடும்பத்திற்கு வழங்கினர். தனது சங்கத்தின் சார்பாக
ரூபாய் 1 லட்சத்தை விரைவில் வழங்குவதாக திரு. ராசவன்னியன் அறிவித்தார்.
கடமை தவறாத தொழிலாளியாக, நல்ல குடும்பத்
தலைவராக, தையல் கலைஞராக, ஓவியராக, அறிவியல், கலை, இலக்கிய ஆர்வலராக, ஆற்றல் மிகு பேச்சாளராக,
எழுத்தாளராக, தொழிற்சங்க தலைவராக, கட்சித்தலைவராக, சமரசமில்லா வர்க்கப் போராளியாக,
உழைக்கும் மக்களின் வாளும், கேடயமுமாக விளங்கிய தோழர். செல்வராஜ் நம்மை விட்டு பிரிந்தாலும்
மக்களின் மனங்களில் என்றென்றும் நிலைத்து நிற்பார்.