Showing posts with label சங்கசெய்திகள். Show all posts
Showing posts with label சங்கசெய்திகள். Show all posts

மத்திய அரசே! என்.எல்.சியின் 5% பங்கு விற்பனையை உடனடியாக வாபஸ் வாங்கு!


மத்திய அரசே! என்.எல்.சியின் 5% பங்கு
விற்பனையை உடனடியாக வாபஸ் வாங்கு!
ஜூலை—3 முதல் காலவரையற்ற
வேலை நிறுத்தம்!
அன்பார்ந்த தொழிலாளர்கள், ஊழியர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள், காண்ட்ராக்ட், சொசைட்டி, ஹவுசிகோஸ் தொழிலாளர்களே! அனைவருக்கும் வணக்கம்.
       மத்திய அரசின் அமைச்சரவை குழு 21-06-2013 அன்று கூடி என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை விற்று ரூ.466 கோடி திரட்டுவது என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து லாபம் ஈட்டியும், நவரத்னா அந்தஸ்தை பெற்ற சிறந்த பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் என்.எல்.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவை நெய்வேலி தொழிற்சங்கங்கள், பொறியாளர், அதிகாரிகள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
        என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை இவ்வாறு சிறுக சிறுக விற்பனை செய்து தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் இத்தகைய தொழிலாள விரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்திடவும், என்.எல்.சி. நிறுவனத்தை பாதுகாத்திடவும், ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்திட வேண்டுமென தொழிலாளர், ஊழியர், பொறியாளர், அதிகாரிகள், காண்ட்ராக்ட், சொசைட்டி, ஹவுசிகோஸ் தொழிலாளர்கள் அனைவரையும் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
        என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவை வாபஸ் பெறும்வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்திட தொழிற்சங்க – பொறியாளர், அதிகாரிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

                போராட்ட நடவடிக்கைகள்

27-06-2013 வியாழன்  - கோரிக்கை அட்டை அணிதல்
28-06-2013 வெள்ளி    - வாயிற்கூட்டம்
29-06-2013 சனி        - வாயிற்கூட்டம்
01-07-2013 திங்கள்     - அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம்.
                      மாலை 6.00 மணிக்கு அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க        
                      அலுவலகத்தில் செயல்வீர்ர்கள் கூட்டம்.
02-07-2013 செவ்வாய்  - ஸ்கியூ பாலம் அருகில் உண்ணாவிரதம்
03-07-2013 புதன்       - காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு பொது கூட்டம்
                      தொ.மு.ச. அலுவலகம் – மாலை 6.00 மணியளவில்
        எனவே அனைத்து தொழிலாள, ஊழியர், பொறியாளர்கள், அதிகாரிகள், காண்ட்ராக்ட், சொசைட்டி, ஹவுசிகோஸ் தொழிலாளர்களும் நிறுவனத்தை பாதுகாத்து பங்கு விற்பனையை தடுத்து நிறுத்திட போராட்ட்த்தை வெற்றிபெறச் செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
தொ.மு.ச  அ.தொ.ஊ.ச    CITU    PTS      GEA       EA          LLF
HMS       NGEA        OA      INTUC     BMS      AITUC        MLF
DMTU      DTUC        AIUTUC  NTU       தொ.வா.ச.             MTU
                        மற்றும் அனைத்து அசோசியேசன்கள்     

ஜூன்- 25 “சமரசமில்லா வர்க்கப்போராளி” தோழர். IPF செல்வராஜ் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி



உழைக்கும் மக்களின் விடுதலைக்காக, ஊழல், சுரண்டல் அமைப்பை ஒழித்துக்கட்டுவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் ஓயாது உழைத்த
தோழர். IPF செல்வராஜ் அவர்களுக்கு எங்களின் வீரவணக்கம்.
அவர் விட்ட பணியை நாங்கள் தொடருவோம் என சூளுரைக்கிறோம் 


என்.எல்.சி.யில் 48 மணிநேர வேலை நிறுத்தம் அறிவிப்பு




நெய்வேலி சி.ஐ.டி.யூ. வளாகத்தில்  19.02.2013 மாலை 7.30 மணியளவில் அகில இந்திய வேலைநிறுத்த அறிவிப்பு கூட்டம், சி.ஐ.டி.யூ. தலைவர் திரு. குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. வேலைநிறுத்தத்தை விளக்கி திரு. நாரயணசாமி, ஏ.ஐ.யூ.டி.யூ.சி,    திரு. வெங்கடேசன், ஏ.ஐ.டி.யூ.சி, நமது சங்க பொதுச்செயலாளர்,  திரு. முருகன், பி.எம்.எஸ்., திரு. திருநாவுக்கரசு, தொ.வி.மு. ஆகியோர் உரையாற்றினர். வேலைநிறுத்தம் 19.02.2013 இரவு பணியில் துவங்கி 21.02.2013 இரண்டாம் பணி முடிவில் முடிவடைவதாக, சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் திரு. வேல்முருகன், 48 மணி நேர வேலைநிறுத்தத்தை அறிவித்தார். திரு.வைத்தி, டி.எம்.டி.யூ. நன்றி கூறினார். வேலைநிறுத்தக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஹெச்.எம்.எஸ்., தொ.மு.ச., ஐ.என்.டி.யூ.சி சங்கங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. (அ.தொ.ஊ.ச. வேலைநிறுத்தம் பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை  பா.தொ.ச. வேலைநிறுத்தத்தை விமரிசித்து துண்டறிக்கை வெளியிட்டிருந்தது)    

2013 பிப்ரவரி 20, 21 அகில இந்திய பொது வேலை நிறுத்த விளக்கப்பொதுக்கூட்டம்





2013 பிப்ரவரி 20, 21 அகில இந்திய பொது வேலை நிறுத்த விளக்கப்பொதுக்கூட்டம், நெய்வேலி மெயின்பஜாரில், 16.02.2013 அன்று மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொ.மு.ச தலைவர் திரு. திருமாவளவன் தலைமைதாங்கினார். வேலை நிறுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தி ஐ.என்.டி.யூ.சி.  மாநில செயலாளர் திரு. சுந்தரமூர்த்தி, ஏ.ஐ.யூ.டி.யூ.சி.  மாநில செயலாளர் திரு. சிவக்குமார், தொ.வி.மு.  ஒருங்கிணைப்பாளர் திரு. மருதமுத்து, ஹெச்.எம்.எஸ். மாநிலக்குழு உறுப்பினர். திரு. பாஸ்கரன், பி. எம்.எஸ். மாநில துணைத்தலைவர் திரு. அங்குசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் திரு. மூர்த்தி, சி.அய்.டி.யூ. மாநில பொதுச்செயலாளர் திரு.சுகுமாறன், தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் திரு.சண்முகம் ஆகியோர் உரையாற்றினர். சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் திரு.வேல்முருகன் நன்றி கூறி, பிப்-18, 19 தேதிகளில் ஆலை வாயிற்கூட்டங்களும், 19 மாலை வேலைநிறுத்த அறிவிப்புக்கூட்டமும் நடைபெறும் என அறிவித்தார்.. கூட்டத்தில் நமது சங்க தலைமை, பகுதி பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர். திரளான நிரந்தர, சொசைட்டி, ஒப்பந்த தொழிலாளர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.  

நெய்வேலியில் பிப்ரவரி 20, 21 அகிலஇந்திய வேலைநிறுத்தத்தயாரிப்புக் கருத்தரங்கம்


12.02.2013 அன்று மாலை 7.00 மணியளவில் ஐ.என்.டி.யூ.சி வளாகத்தில்  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, பொதுத்துறை பங்குவிற்பனையை கைவிடுவது, காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச்ச சம்பளம் ரூ.10,000 வழங்கவேண்டும், போனஸ், கிராஜிவிட்டி உச்சவரம்பை நீக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 20, 21 அகிலஇந்திய வேலைநிறுத்தத்தயாரிப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. ஐ.என்.டி.யூ.சி தலைவர் சுந்தரமூர்த்தி தலைமைதாங்கினார். அனைத்து சங்க முதல்நிலை, இரண்டாம் நிலை தலைவர்கள் கருத்துரை வழங்கினர். தொ.மு.ச பொதுச்செயலாளர் ராசவன்னியன், அ.தொ.ஊ.ச, பா.தொ.ச சங்கங்களையும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அறைகூவல் விடுத்தார். மாநில தலைவர்களை அழைத்து 16.02.2013 அன்று மெயின்பஜாரில் வேலைநிறுத்த அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. நமது சங்க தலைவர் தோழர். வேலு உரையாற்றுகையில், அரிதினும் அரிதாக பேச்சுவார்த்தை சங்கமான தொ.மு.சவும் வேலைநிறுத்தத்திற்கு தலைமையேற்பதால் இதைப் பயன்படுத்தி வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச்செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். ஏராளமான தொழிலாளர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். 

தொழிலாளர் முன்னேற்ற சங்கத்திற்கு நன்றி




சமரசமில்லா வர்க்கப்போராளி மறைந்த  தோழர்.IPF செல்வராஜ் 
அவர்களின் குடும்பத்தினை பாதுகாக்க 12.01.2013 அன்று ரூபாய்
லட்சத்திற்கான காசோலையை, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக நன்கொடையாக வழங்கிய தலைவர் திரு. திருமாவளவன், பொதுச்செயலாளர் திரு. இராசவன்னியன், பொருளாளர்               திரு. அண்ணாதுரை, அலுவலகச்செயலாளர் திரு. ஶ்ரீதரன் ஆகியோருக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2013



       தொழிலாள தோழர்கள்     

          அனைவருக்கும்


               எமது 


ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

நமது சங்கத்தின் புதிய தலைவர் S. வேலு





நமது சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம், 16.11.2012 மாலை 6.00 மணியளவில்,       மாநில தலைவர் தோழர். ஜே. சிதம்பரநாதன்,  மற்றும் இ... (மா-லெ) மக்கள் விடுதலையின் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர். தோழர். எஸ். அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் தலைமை தாங்கினார். மறைந்த தலைவர். தோழர். செல்வராசுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு சுரங்கம்-1 பகுதி செயலாளர் தோழர். எஸ். வேலு புதிய தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய ஊதிய மாற்று ஒப்பந்தக் கோரிக்கைப் பட்டியல் தயாரிக்க வல்லுநர் குழு அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது  என முடிவு செய்யப்பட்டது. இறுதியாக உணவகப்பகுதி துணைத்தலைவர் தோழர். நா. கென்னடி நன்றி கூறினார்.     

“மக்கள் தலைவரின் மரணம் மலையைவிட கனமானது”

                                                                             
“சமரசமில்லா வர்க்கப் போராளி” தோழர். IPF செல்வராஜ் அவர்கள் 
24-04-1962ல் பிறந்தார்.  இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று பின்னர் என்.எல்.சி. நிறுவனத்தில் தீயணைப்பு துறையில் பணியாற்றிய திரு. முனுசாமி- திருமதி. நாகம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகனாவார் தோழர். செல்வராஜ்.
     நெய்வேலியில் பள்ளியில் படிக்கும்பொழுதே மாணவர் போராட்டங்களில் முன்னணிப் பங்காற்றினார். கருத்த நிறத்திற்கும் கரகரப்பான குரலுக்கும் சொந்தக்காரரான அவர் கடலூரில் ITIல் படிக்கும்பொழுதே மாணவர் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். பின்னர் என்.எல்.சி. நிறுவனத்தில் தொழில் நுட்ப பயிற்சி முடித்தார்.
     தனது 20 வது வயதில் புரட்சிகர கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு உறுப்பினரானார். பின்னர் அக்கட்சியின் வெகுஜன முன்னணியான தமிழக மக்கள் முன்னணியில் முக்கிய பங்காற்றினார். பின்னர் இந்திய மக்கள் முன்னணி (INDIAN PEOPLES FRONT) (IPF)                                             மற்றும் தமிழக இளைஞர் இயக்கம் ஆகியவற்றில் மாவட்ட, மாநில பொறுப்புகளை வகித்து பல மக்கள் போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்.
     குறிப்பாக, பண்ருட்டி, அங்குசெட்டிபாளையத்தில் ஒரு நிலப்பிரபுவின் வசம் இருந்த அரசு புறம்போக்கு நிலங்களை பறிமுதல் செய்து நிலமில்லா ஏழைகளுக்கு வீட்டுமனைகளாக பிரித்து கொடுத்த இயக்கத்தில் போர்குணத்துடன் பங்கேற்றார்.
     நெய்வேலியில் பகுதிப்பிரச்சனைகளுக்காகவும், மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கெதிராகவும், தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்களையும், பேரணிகளையும் தலைமை தாங்கிநடத்தினார்.
     ‘உணர்வுகள்’, ‘யதார்த்தம்’, ‘சுரங்கம்’ போன்ற பத்திரிகைகளை நடத்தி இளைஞர்கள், இளந்தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகர அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
      1980 களில் என்.எல்.சி. நிறுவனத்தில் இரண்டாம் சுரங்கமும் மற்றும் இரண்டாம் அனல்மின் நிலையமும் துவங்கப்பட்டபோது நெய்வேலி பகுதியில் இருந்த பல கிராமங்களும், விளைநிலங்களும் சொற்ப தொகை இழப்பீடாக கொடுக்கப்பட்டு வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டன. அதிக தொகை இழப்பீடாகக்கேட்டும், வீட்டுகொருவருக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை, மாற்றுக்குடியிருப்பு மனை வழங்கக்கோரியும் நடைபெற்ற வாழ்வாதாரத்தை இழந்த அம்மக்களின் போராட்டங்களில் பங்கேற்று அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற பாடுபட்டார்.
05.01.1987 ல் என்.எல்.சி. நிறுவனத்தில் இரண்டாம் அனல்மின் நிலையத்தில் நிரந்தரப் பணியில் சேர்ந்தார்.
அக்கால கட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாம் சுரங்கத்திலும், இரண்டாம் அனல்மின் நிலையத்திலும் ITI படித்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பணியில் அமர்த்தப்பட்டார்கள். அவர்கள் மிக்க்குறைந்த ஊதியத்தில் இரண்டாண்டு பயிற்சி என்ற அடிமை முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள். வெகுண்டெழுந்த அவ்விளந்தொழிலாளர்கள், வழமையான தொழிற்சங்கங்கள் தங்கள் இழிநிலையை கண்டுகொள்ளாத சூழ்நிலையில் தங்களுக்கென ஒரு தொழிற்சங்கத்தை அமைத்துக்கொண்டு போர்குணமிக்க, வீரம்செறிந்த பல போராட்டங்களை நடத்தி, பின்னர் அச்சங்கத்தை HMS தொழிற்சங்கத்துடன் இணைத்தார்கள்.
தனது கட்சியின் சார்பில் தொழிற்சங்கம் எதுவும் அக்காலகட்டத்தில் இல்லாத நிலையில் தோழர். செல்வராஜ், HMS தொழிற்சங்கத்தில் உறுப்பினரானார். பலபோராடங்களில் பங்கேற்றார். அத்தொழிற்சங்கம் ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் போன்ற நிலையை அடைந்தது. என்.எல்.சி. நிர்வாகம் கண்டு அஞ்சுகின்ற வகையில் இரண்டாம் அனல்மின் நிலைய தொழிலாளர்களின், தன்னிகரற்ற போராட்டத் தலைவனாக தோழர். செல்வராஜ் விளங்கினார்.
அவரோடு செல்வராஜ் என்ற பெயரில் பல தொழிலாளர்கள் பணியாற்றியதால் அவரை தொழிலாளர்கள் அடையாளப்படுத்த IPF செல்வராஜ் .என்றும் IPF என்றும் அழைக்கத்தொடங்கினர்.
என்.எல்.சி. நிர்வாகம், அவரை பலமுறை தற்காலிக பணிநீக்கம் செய்தது.தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அஞ்சி அவற்றை திரும்பப்பெற்றது. அவரை ஒன்றும் செய்யமுடியாத நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் காவல்துறை, பொய்யான கொலை முயற்சி வழக்கொன்றில் அவரை கைது செய்து சிறையிலடைத்தது. அதன் காரணமாக நிர்வாகம் அவரை தற்காலிக பணிநீக்கம் செய்ததது. தோழர். செல்வராஜ், நிபந்தனை பிணையில் சிலகாலம் சீர்காழியில் தங்கியிருந்தார். அங்கே அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளராகயிருந்த தோழர். குணசேகரன் அவர்களை சந்தித்து கட்சிக்கு அடித்தளமிட்டார். நீதிமன்றம் அவரை நிரபராதியென தீர்ப்பளித்தது. தற்காலிக பணிக்காலத்தில் இழந்த ஊதியமனைத்தையும் மொத்தமாகப்பெற்று மீண்டும் பணியில் அமர்ந்தார். அதனால் அவருடைய செல்வாக்கு தொழிலாளர்கள் அதிகாரிகள் மத்தியில் பன்மடங்கு உயர்ந்தது.
.HMS சங்கம் நடத்திய வெற்றிகரமான, மிகப்பெரிய, வேலைநிறுத்தத்தின் காரணமாக நிர்வாகத்தால் பேச்சுவார்த்தை சங்கமாக அங்கீகரிக்கப்பட்டது. அப்போது தலைமைப்பொறுப்பிலிருந்தவர்களின் சந்தர்ப்பவாத, சமரசப்போக்கின் காரணமாக மூன்று பிரிவுகளாக பிளவுண்டு, ஒரு பெரும்பிரிவினர் தி.மு.க வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் இணந்தனர். தோழர். செல்வராஜ், தனது புரட்சிகர அணிகளோடு வெளியேறினார்.  அப்போது தாழ்த்தப்பட்டோர் சங்கமும், கட்சியும் அவரை அழைத்தன. அவற்றையெல்லாம் ஏற்காமல் தனது கட்சியால் நிறுவப்பட்ட AICCTU  சங்கத்தை நெய்வேலியில் துவங்கி அதன் முதல் தலைவரானார். அவரது சங்கம், சிறிய சங்கமாக இருந்தாலும், பெரிய சங்கங்களால் சாதிக்க முடியாத பல சாதனைகளை படைத்து நெய்வேலி தொழிற்சங்க இயக்கத்தின் போக்கை மாற்றியமைத்தது.
என்.எல்.சி. நிறுவனமே துவங்குவதாக இருந்த ஜீரோ யூனிட் அனல்மின் நிலையத்தை தனியார் துவங்க அனுமதி வழங்கப்பட்டபோது அதனை எதிர்த்து தனியார்மய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை நடத்தியது.
என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளின் சிறிய பகுதியை அதன் பணியாளர்களுக்கே மத்திய அரசு விற்பனை செய்தபோது அது தனியார்மயத்தின் முதல்படி என்றுகூறி, பங்குகளை வாங்கவேண்டாம் என தொழிலாளர் மத்தியில் வேண்டுகோள்விடுத்து பங்குவிற்பனைக்கு எதிராக இயக்கம் நடத்தியது.
ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிலாளர்கள் தங்களுக்காக நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய சங்கங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இரண்டாண்டு காலம் மாபெரும் கூட்டியக்கத்தை நடத்தி, நீதிமன்ற உத்தரவு பெற்று முதல் ரகசிய வாக்கெடுப்பு நடைபெறச்செய்து வரலாறு படைத்தது.
அவ்வியக்கம் நடைபெறும் போது ஓராண்டு காலத்திற்கும் மேலாக தோழர். செல்வராஜ் அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு பிறகு மீண்டும் பணியிலமர்ந்தார்.
தோழர். செல்வராஜை தற்காலிக பணிநீக்கம் செய்ய காரணமாக இருந்த நிர்வாகத்துறை இயக்குனர் நரசிம்மனின் ஊழல் நடவடிக்கைகளுக்கெதிராக இயக்கம் நடத்தி அவரை என்.எல்.சியை விட்டு வெளியேரச்செய்தது.
என்.எல்.சி. நிறுவனத்தின் பங்களிப்பு இன்றி பணியாளர்களிடம் மட்டுமே பணம் பிடித்தம் செய்து உருவாக்கப்பட்ட என்.எல்.சி. ஓய்வூதிய திட்டத்திற்கெதிராக இயக்கம் நடத்தி, நீதிமன்ற உத்தரவு மூலம் பிடித்தம் செய்த தொகையை திருப்பித்தர வைத்ததது.
என்.எல்.சி. தொழிலாளர்கள் குடும்பத்தோடு அகில இந்திய சுற்றுலா (LTC) செல்ல அனுமதிக்கப்பட்ட தொகையை, முறைகேடாக சென்றார்கள் என்று கூறி நிர்வாகம் பணம் பிடித்தம் செய்ததது, பணம் பிடித்தத்திற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றது.
ரகசிய வாகெடுப்பின்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசங்கப் பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் தோழமை சங்கங்களோடு மீண்டும் நீதிமன்றம் சென்று 51% வாக்குகள் வரை பெறும் சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவேண்டுமென்றும், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படவேண்டுமென்றும் உத்தரவைப் பெற்று பல சங்க பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தது.
மேலும் தொழிற்சங்கங்களோடு சேர்ந்து போராடி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8.33% குறைந்த பட்ச போனஸ் பெற்றுத்தந்தது.
என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சித்தபோது, அனைத்து சங்கங்களோடு முன்னணியில் நின்று, வேலைநிறுத்தம் நடத்தி, தனியார் மயத்தை தடுத்து நிறுத்தியது.
மத்திய தொழிலக பாதுகாப்பு படையை என்.எல்.சி. நிறுவனத்தில் அனுமதித்த்தற்கு எதிரான இயக்கம்,துரோகமான ஊதியமாற்று ஒப்பந்தங்களுக்கு எதிரான, அதிகாரிகளுக்கு இணையான ஊக்க ஊதியம், போனசுக்கான கூட்டுப்போராட்டங்கள் என, அதன் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
தோழர். செல்வராஜ் கடலூர் மாவட்ட கட்சியின் செயலாளராகவும், தொழிற்சங்க செயலாளராகவும் தொடர்ந்து பணியாற்றினார்.
 அவருடைய சமூக சேவையைப் பாராட்டி, தலித் சாகித்ய அக்காடமி, அவருக்கு அம்பேத்கர் விருது வழங்கி கவுரவித்தது.
தான் சார்ந்த கட்சியில் தலைதூக்கிய வலது சந்தர்ப்பவாத, அரைஅராஜகவாத, சிறுமுதலாளித்துவ தலைமையின், குறுங்குழுவாத கருத்தியலிக்கு எதிராக போராடி, பெரும்பான்மையான உறுப்பினர்கள், தலைவர்களோடு, வெளியேறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலையை துவங்க, முக்கிய பங்காற்றினார். அக்கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். நெய்வேலி தொழிற்சங்கத்தை கட்சியின் ஜனநாயக தொழிர்சங்க மையத்துடன் (DTUC) இணைத்தார்.
என்.எல்.சி. நிறுவனத்தின் விரிவாக்கத்திட்டத்தில் நடைபெற்ற, ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் குறித்து என்.எல்.சி. நிறுவனத்தின் தலைவர் அன்சாரி மற்றும் உயரதிகாரிகளை சுட்டிக்காட்டும் வகையில் 12-11-2009ல் “தமிழக அரசியல்” பத்தித்திரிகையில் வெளி வந்த செய்தியை படித்த அப்பாவி தொழிலாளர்கள் 6 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்த்தற்கெதிராக தொழிற்சங்கங்கள் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தி, பணிநீக்க உத்தரவை திரும்பப்பெறச்செய்து தங்கள் கடமையை அத்தோடு முடித்துகொண்டன.
என்.எல்.சி. தலைவர் அன்சாரியின், பணியாளர்கள் மீதான பழிவாங்கும் அடக்குமுறைக்கெதிராகவும், ஊழல் முறைகேடுகளுக்கெதிராகவும், கட்சிய்யின் சார்பாக தோழமை அமைப்புகளோடு சேர்ந்து, ஊழல் எதிர்ப்பு முன்னணியை உருவாக்கினார். அம்முன்னணி மூலம் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றியதற்காக ஓராண்டு காலத்திற்குமேல் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாமல் ஊழலுக்கெதிராக  CBI விசாரணை கோரி உயர்நீதிமன்றதில் DTUC சார்பாக வழக்கு தொடுத்தார்.
அதைக்கண்டு அஞ்சிய நிர்வாகம், தோழர். செல்வராஜை, என்.எல்.சி. நிறுவனத்திலிருந்து, 28.05.2011ல் பணிநீக்கம் செய்தது. அவரது பணிநீக்கத்திற்கெதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
தோழர். செல்வராஜ், சென்னை CBI சிறப்புநீதிமன்றத்தில், என்.எல்.சி. தலைவர் அன்சாரியின் மீது 10000 கோடி ஊழலை விசாரிக்கக்கோரி, தனிநபர் புக்காரை பதிவுசெய்தார். வரலாற்றிலேயே முதல் முறையாக, அவரது தனிநபர் புகாரை ஏற்றுக்கொண்ட, சென்னை CBI சிறப்புநீதிமன்றம், அன்சாரி மீது FIR  பதிவு செய்து, புகாரை விசாரித்து, அறிக்கையளிக்குமாறு CBIக்கு உத்தரவிட்டது.
மேற்கண்ட உத்தரவிற்கெதிராக, அன்சாரி தன் செல்வாக்கை பயன்படுத்தி இடக்கால தடை பெற்றார்.
தடையை நீக்குவதற்கு தோழர். செல்வராஜ் எடுத்த நடவடிக்கை காரணமாக, வழக்கு விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
28.05.2012 அன்று மாலை நெய்வேலியில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தோழர். செல்வராஜ், மர்மமான முறையில் சாலை விபத்திற்குள்ளகி, பலத்த தலைக்காயத்துடன், சுய உணர்விழந்த நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
தங்கள் உரிமைகளுக்காக தன்னலம் கருதாமல் போராடி வந்த தன்னிகரில்லா தலைவனை எப்படியாவது காப்பாற்றுவதற்காக, அவருடைய மருத்துவச் செலவுக்காக, என்.எல்.சி. தொழிலாளர்களும், அதிகாரிகளும் தாங்களாக முன்வந்து, என்.எல்.சி. வரலாறு காணாத வகையில் ரூபாய் 6 லட்சத்தை மருத்துவ செலவுக்காக வசூல் செய்து கொடுத்தனர். அவருடைய கட்சி மருத்துவ செலவுக்காக ரூபாய் 50000 கொடுத்த்தோடு, முக்கிய தலைவர்கள் 24 மணி நேரமும் அவரோடு இருந்து, அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ஆனால் அவர் சுயநினைவிழந்த நிலையிலேயே 25.06.2012 அன்று காலை வீர மரணம் அடைந்தார்
வலதுசாரிகள் முதல் தீவிர இடதுசாரிகள் வரையிலான, பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு அவரை “சமரசமில்லா வர்க்கப் போராளி” என அழைத்து, தங்கள் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொண்டனர். 26.06.2012 அன்று நெய்வேலியில் நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் கட்சித்தோழர்களும் கலந்துகொண்டு, ஊழல் அன்சாரிக்கு எதிராக ஆவேச முழக்கமிட்டு, தோழர். செல்வராஜிக்கு வீரவணக்கம் செய்தனர். அவருடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியை 10.07.2012 அன்று நெய்வேலியில் நடத்தி, அவரை இழந்து வாடும், அவருடைய போராட்டங்கள் அனைத்திலும் அவருக்கு ஊக்கமளித்து துணைநின்ற அவரது  துணைவியார் மற்றும் இரண்டு பெண்குழந்தைகளுக்கு ரூபாய் 1 லட்சத்தை நிதியாக வழங்கியது.
                                  
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அதிகாரிகளும் சங்க, கட்சி வித்தியாசமின்றி, நெய்வேலி வரலாறு காணாதவகையில் ரூபாய் 11 லட்சத்திற்குமேல் தோழர். செல்வராஜ் குடும்ப பாதுகாப்பு நிதியாக முன் வந்து அளித்தனர்.
06.10.2012 அன்று, நெய்வேலியில் நடைபெற்ற தோழர். IPF செல்வராஜ் குடும்ப பாதுகாப்பு நிதியளிப்பு கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் அதிகாரிகளும் கட்சித் தோழர்களும் கலந்துகொண்டனர். அனைத்து சங்க தலைவர்களும் தோழர். செல்வராஜுக்கு புகழாரம் சூட்டி, தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிதியை இ.க.க. (மா-லெ) மக்கள் விடுதலையின் பொதுச்செயலாளர். தோழர். ஜே. சிதம்பரநாதன் அவர்களும் தொ.மு.ச பொதுச்செயலாளர் திரு. ராசவன்னியன் அவர்களும் தோழர். செல்வராஜின் குடும்பத்திற்கு வழங்கினர். தனது சங்கத்தின் சார்பாக ரூபாய் 1 லட்சத்தை விரைவில் வழங்குவதாக திரு. ராசவன்னியன் அறிவித்தார்.
கடமை தவறாத தொழிலாளியாக, நல்ல குடும்பத் தலைவராக, தையல் கலைஞராக, ஓவியராக, அறிவியல், கலை, இலக்கிய ஆர்வலராக, ஆற்றல் மிகு பேச்சாளராக, எழுத்தாளராக, தொழிற்சங்க தலைவராக, கட்சித்தலைவராக, சமரசமில்லா வர்க்கப் போராளியாக, உழைக்கும் மக்களின் வாளும், கேடயமுமாக விளங்கிய தோழர். செல்வராஜ் நம்மை விட்டு பிரிந்தாலும் மக்களின் மனங்களில் என்றென்றும் நிலைத்து நிற்பார்.

தோழர். IPF செல்வராஜ் குடும்ப நிதியளிப்புக் கூட்டம்




பாட்டாளி வர்க்கத்தின், குறிப்பாக என்.எல்.சி. தொழிலாளர் வர்க்கத்தின் 

வாளும், கேடையமாக விளங்கியவரும், ஊழலுக்கெதிராக தனது இறுதி 

மூச்சுவரை அயராது போராடியவருமான, “சமரசமிலா வர்க்கப்போராளி”  

கடலூர் மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – 

லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை மற்றும்  நெய்வேலி DTUCன் 

தலைவருமான மறைந்த        தோழர். IPF செல்வராஜ், அவர்களின் 

குடும்ப பாதுகாப்பு நிதியளிப்புக் கூட்டம், 06.10.2012, சனிக்கிழமை, மாலை 6.00 மணியளவில் நெய்வேலி, வட்டம்-17, மு.சு. மணி அரங்கில் நடைபெறவுள்ளது.
      தோழர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
     சாதி, சங்க, கட்சி வித்தியாசமில்லாமல் நெய்வேலி வரலாறு காணாத வகையில் ரூபாய் ஆறு லட்சத்திற்கு மேல் மருத்துவ நிதியாகவும், ரூபாய் பதினோறு லட்சத்தை குடும்ப பாதுகாப்பு நிதியாகவும் வர்க்க உணர்வோடு வழங்கிய அனைத்துத் தோழர்களுக்கும் எங்களின் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்
                                 இவண்
  என்.எல்.சி. ஒர்க்கர்ஸ் சாலிடாரிட்டி யூனியன் ( DTUC ), நெய்வேலி


வீர வணக்கம்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) மக்கள் விடுதலையின் கடலூர் மாவட்ட செயலாளரும், ஜனநாயக தொழிற்சங்க மையம் ( DTUC),  நெய்வேலி, தலைவரும், நெய்வேலி தொழிலாளர் வர்க்கத்தின் மிகப்பெரிய போராளியுமான
தோழர். IPF M. செல்வராஜ் அவர்கள்
25.06.2012, திங்கள் கிழமை, காலை 7.45 மணியளவில் சென்னை மலர் மருத்துவமனையில் அகால மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழரின் இறுதி ஊர்வலம் 26.06.2012, செவ்வாய் கிழமை, மாலை 3.00 மணியளவில் டி-3 , இத்தாலியன் சாலை, வட்டம்-27, நெய்வேலி டவுன்ஷிப்பிலிருந்து புறப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை, கடலூர் மாவட்டம்
 ஜனநாயக தொழிற்சங்க மையம் ( DTUC),  நெய்வேலி.

நமது தலைவர் தோழர். செல்வராஜ் நலம் பெற விழைகிறோம்


என்.எல்.சி. தொழிற்சங்க இயக்கத்தின் மிகப்பெரிய தலைவரும்
நமது சங்கத் தலைவருமான தோழர். செல்வராஜ் அவர்கள் 28.05.2012 அன்று சாலை விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து நினைவிழந்த நிலையில் சென்னை, போர்ட்டீஸ் மலர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் பூரண குணமடைய வேண்டுகிறோம். அவருடைய சிகிச்சைக்காக நன்கொடை வழங்கிவரும் என்.எல்.சி தொழிலாளர் வர்க்கத்திற்கும் நலம் விரும்புவோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். வங்கி மூலம் நன்கொடை செலுத்த விரும்புபவர்கள் நமது சங்க வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

13,000 என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வெல்க!


ஊதிய உயர்வு, சமவேலைக்கு சமஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த 18 நாட்களாக போராடிவரும் 13,000 என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறோம். உண்ணாவிரதம், சாலை மறியல், ரயில் மறியல் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு உறுதியோடு போராடிவரும் தொழிலாளர்களுக்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.  உடனடியாக மத்திய அரசு தலையிட்டு அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இரண்டாம் அனல் மின்நிலைய வாயில் முன்பு மே நாள் கொடியேற்றப்பட்டது.


01.05. 2012 அன்று இரண்டாம் அனல் மின்நிலைய வாயில் முன்பு நமது சங்க பொதுச்செயலாளர் தலைமையில் சுரங்கம்-1 பகுதி செயலாளர் நமது சங்க கொடியை ஏற்றிவைத்தார். இரண்டாம் அனல் மின்நிலைய அலுவலகப்பகுதி செயற்குழு உறுப்பினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.  

புரட்சிகர மே நாள் வாழ்த்துக்கள்


சங்க உறுப்பினர்களுக்கும் தொழிலாள தோழர்களுக்கும் புரட்சிகர மே நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மே நாள் தியாகிகளுக்கு நமது செவ்வணக்கம்.
 பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் அடக்குமுறைக்கெதிராகவும், ஊழலுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகள மீட்டெடுக்கவும் நமது போராட்டத்தை முன்னெடுத்துசெல்வோம்! வெற்றி பெறுவோம்! என மே நாளில் சூளுரைப்போம்.

நமது சங்க தோழர்களுக்கு நமது CPI(ML)மக்கள் விடுதலை பொதுச்செயலாளரின் செய்தி!


அன்புள்ள தோழர்களே!
நாம் காத்திருந்த தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. என்.எல்.சி. தேர்தல் முடிவுகள் வருத்தமும் அதிர்ச்சியும் அளிப்பதாக இருக்கலாம். இருப்பினும் கவலைப்பட ஒன்றுமில்லை. நாம் கண்டுபிடிக்க வேண்டிய வீழ்ச்சி நிலைக்கான காரணம் நம்முடைய திசைவழியும் முயற்சியும் எங்கே சரிசெய்ய வேண்டிய தேவையுள்ளது என்பதையே சுட்டிக்காட்டுகிறது. மொத்த நிகழ்விலும் மிகவும் பாராட்டத்தக்க விஷயம் என்னவெனில் தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும் தோழர்களாகிய நீங்கள் கொண்டிருந்த திடமான ஒருமைப்பாடுதான். அதுவே நமக்கு முக்கியமான தேவையான மதிப்பாகும். ஒருமைப்பாட்டையும் கடின உழைப்பையும் வெளிப்படுத்திய நெருக்கமான தோழர்களுக்கு மீண்டும் ஒருமுறை என் பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒட்டுமொத்த தேர்தல் நிகழ்வையும் நாம் இதயபூர்வமாக பரிசோதித்து கண்டுபிடித்தால் எதிர்காலம் நம்முடையதாகும்.
புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
                                   உங்கள் தோழமையுள்ள,
                                            ஜேசி
                                      பொதுச்செயலாளர்
                                    CPI(ML)மக்கள் விடுதலை   

நமது சங்கம் இரகசிய வாக்கெடுப்பு தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியது.


நமது சங்கம் 23.03.2012 அன்று தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியது. காலை 5.30 மணிக்கு சுரங்கம்-2ல் வாயிற்கூட்டம் நடைபெற்றது. தலைவர் சிறப்புரையாற்றினார். நாள் முழுவதும் நெய்வேலி நகரியம் முழுவதும் ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது பகல் 1.30 மனியளவில் அனல் மின்நிலையம்-2ல் பிரச்சாரமும், மாலை 7.00 மணியளவில் 8 ரோடு சந்திப்பில் தெருமுனைக்கூட்டமும் நடைபெற்றது. பிரச்சாரத்தில் நமது சங்க தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பகுதி பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
26.03.2012 அன்று மாலை 7.00 மணியளவில் மெயின்பஜாரில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. தலைவர் சிறப்புரையாற்றினார்..
27.03.2012 முதல் 31.03.2012 வரை அனைத்து அலுவலக, ஆலைப்பகுதிகளிலும் பிரச்சாரமும் துண்டுபிரசுர விநியோகமும் நடைபெற்றது. ஆதரவாளர்களின் வீடுகளுக்குச் சென்று ஆதரவு திரட்டப்பட்டது.

என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் போட்டியிடும் நமது சங்கத்திற்கு தற்காலிகமாகக்கூட கட்டிடம் தர மறுக்கும் நிர்வாகத்தை, கட்டிடம் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தை நாட முடிவு!


நமது சங்கம் துவங்கிய காலத்திலிருந்தே சங்கத்திற்கு அலுவலகக் கட்டிடம் வழங்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்திவந்தோம். நிர்வாகம் தொடர்ந்து மறுத்துவந்தது.
     கடந்த ரகசிய வாக்கெடுப்பு தேர்தலின்போதும் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டும் கிடைக்கப்பெறாததால் நீதிமன்றம் செல்ல முடிவெடுத்தோம். ஆனால் நீண்டகால தடையுத்தரவுக்குப்பிறகு ரகசிய வாக்கெடுப்பு வருவதால், தொழிலாளர், ஊழியர் நலன் கருதி அம்முடிவை கைவிட்டோம்.
ஆனால் இம்முறை, தேர்தலில் போட்டியிடும் தொழிற்சங்கங்களுக் கிடையே, நிர்வாகம் தரும் சலுகைகளில் பாகுபாடு இருக்கக்கூடாது, சமவாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில், நமக்கு தர்காலிகமாவது வாடகை அடிப்படையில் சங்கக்கட்டிடம் வழங்குமாறு நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கக்கோரி,தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் 09.03.2012 அன்று மண்டல தொழிலாளர் ஆணையாளரிடம் கோரிக்கை மனுவைக்கொடுத்தோம். அவரும், நமது கோரிக்கை மீது தேவையான நடவடிக்கை எடுக்கசொல்லி 11.03.2012 தேதியிட்ட கடிதம் ஒன்றை பொதுமேலாளர்/மனித வளம்/தொழிலுறவு என்.எல்.சி.அவர்களுக்கு அனுப்பி, நகல் ஒன்றை நமக்கு அனுப்பியிருந்தார். ஆனால் நிர்வாகத்தரப்பிலுருந்து எந்தவித எழுத்துப்பூர்வ தகவலும் இல்லை. எனவே நமது சங்கம் 17.03.2012 அன்று மேலே குறிப்பிட்ட இருவருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் 3 தினங்களுக்குள் அலுவலகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் நீதிமன்றத்தை நாடுவதைத்தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டுளோம்.    .

சி.ஐ.டி.யு சங்கம் ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் ஆதரவளிக்கக்கோரி நமது சங்கத்திற்கு கடிதம்


ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் சி..டி.யு சங்கம் வெற்றிபெற நமது சங்கத்தின் ஆதரவை கேட்டு அச்சங்கத்தின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் கடிதம் ஒன்றை, நமது சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளரை சந்தித்து 13.03.2012 அன்று வழங்கினர்.