என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் போட்டியிடும் நமது சங்கத்திற்கு தற்காலிகமாகக்கூட கட்டிடம் தர மறுக்கும் நிர்வாகத்தை, கட்டிடம் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தை நாட முடிவு!


நமது சங்கம் துவங்கிய காலத்திலிருந்தே சங்கத்திற்கு அலுவலகக் கட்டிடம் வழங்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்திவந்தோம். நிர்வாகம் தொடர்ந்து மறுத்துவந்தது.
     கடந்த ரகசிய வாக்கெடுப்பு தேர்தலின்போதும் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டும் கிடைக்கப்பெறாததால் நீதிமன்றம் செல்ல முடிவெடுத்தோம். ஆனால் நீண்டகால தடையுத்தரவுக்குப்பிறகு ரகசிய வாக்கெடுப்பு வருவதால், தொழிலாளர், ஊழியர் நலன் கருதி அம்முடிவை கைவிட்டோம்.
ஆனால் இம்முறை, தேர்தலில் போட்டியிடும் தொழிற்சங்கங்களுக் கிடையே, நிர்வாகம் தரும் சலுகைகளில் பாகுபாடு இருக்கக்கூடாது, சமவாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில், நமக்கு தர்காலிகமாவது வாடகை அடிப்படையில் சங்கக்கட்டிடம் வழங்குமாறு நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கக்கோரி,தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் 09.03.2012 அன்று மண்டல தொழிலாளர் ஆணையாளரிடம் கோரிக்கை மனுவைக்கொடுத்தோம். அவரும், நமது கோரிக்கை மீது தேவையான நடவடிக்கை எடுக்கசொல்லி 11.03.2012 தேதியிட்ட கடிதம் ஒன்றை பொதுமேலாளர்/மனித வளம்/தொழிலுறவு என்.எல்.சி.அவர்களுக்கு அனுப்பி, நகல் ஒன்றை நமக்கு அனுப்பியிருந்தார். ஆனால் நிர்வாகத்தரப்பிலுருந்து எந்தவித எழுத்துப்பூர்வ தகவலும் இல்லை. எனவே நமது சங்கம் 17.03.2012 அன்று மேலே குறிப்பிட்ட இருவருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் 3 தினங்களுக்குள் அலுவலகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் நீதிமன்றத்தை நாடுவதைத்தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டுளோம்.    .