இரண்டாம் அனல்மின்நிலையத்திற்கு பணிக்குசென்ற இரண்டு தொழிலாளர்கள் சாலைவிபத்தில் உயிரிழந்தனர். அவர்களின் வாரிசுகளுக்கு நிர்வாகம் வேலைவாய்ப்பு தரமறுத்ததையடுத்து இரண்டாம் அனல் மின்நிலையத்தில் நேற்று இரவுப்பணியிலிருந்து முதல் பணி இறுதிவரை வேலைநிறுத்தம் நடைபெற்றது.
என்.எல்.சி. நிர்வாக அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு அங்கீகரிகப்பட்ட சங்கங்களுக்கும் மனிதவளத்துறை இயக்குனருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறந்த தொழிலாளர்களின் மனைவியருக்கு 2012 ஜனவரிக்குள் நிரந்தர பணி தருவதாக நிர்வாகம் ஏற்றுக்கொன்டுள்ளது.
மேற்படி தகவலை பகல் 1.45 மணியளவில் என்.எல்.சி. பொதுமருத்துவ மனையில் நடைபெற்ற கூட்டத்தில் தொ.மு.ச பொதுச்செயலாளர் தெரிவித்தார். ஒப்பந்த நகலை தொ.மு.ச. அலுவலகச்செயலாளர் ஶ்ரீதர் படித்தார். அதில் என்.எல்.சி. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வேலைவாய்ப்பு தருவதாக சொல்லப்பட்டுள்ளது. (12 / 3 ஒப்பந்தம் உட்பட இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலைதருவதாக நிர்வாகம் ஏற்றுகொண்ட இதுபோன்ற பல ஒப்பந்தங்கள் நிர்வாகத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவை போல இதுவும் ஒன்றா ? என்பது 2012 ஜனவரியில்தான் தெரியும்.) கூட்டத்தில், உயிரழந்த தொழிலாளர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதியாக போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவித்த தொ.மு.ச தலைவர் திருமாவளவன் இரண்டாம் பணியிலிருந்து வேலைக்கு செல்லுமாறு இரண்டாம் அனல்மின்நிலையத்தொழிலாளர்களை கேட்டுக்கொண்டார். முன்னதாக பா.தொ.ச பொதுச்செயலாளர் திலகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒரு தொழிலாளி பிக்-அப் பஸ் என்னாயிற்று என்று கேட்டதற்கு ஜனவரியில் விட பேசி ஏற்பாடு செய்யபடும் என மொட்டையாக பதிலளித்தார் தொ.மு.ச பொதுச்செயலாளர் ராஜவன்னியன். இக்கூட்டத்தில் நமது சங்க பொதுச்செயலாளரும் கலந்துகொண்டார்.