என்.எல்.சி. நிறுவனம் உருவாக வித்திட்ட ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் சரித்திரம்


கடலூர் மாவட்டத்தில், கடலூர்-பண்ருட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருகண்டேஸ்வரம் என்ற ஊரில்  22-06-1890 அன்று மாசிலாமணி முதலியாருக்கும் சொர்ணாம்பாளுக்கும் மகனாகப்பிறந்தவர்தான் அமரர் திரு. ஜம்புலிங்க முதலியார் அவர்கள்.
ஜம்புலிங்க முதலியார் அவர்கள் அறிஞர் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரையும் கவரும் நெடிய உருவம் கொண்டவர்; தலைப்பாகையுடன் கூடிய வெள்ளுடை அணிந்தவர்; எப்போதும் இனிய பண்பு நலமும், எளிய குணங்களும் கொண்டவர்; ஒப்புரவு செய்யும் பொதுநலத்தொண்டர்; சமுதாயப்பணியாளர்; நல்ல நிர்வாகம் செய்யும் திறமை படைத்தவர்; அதனாலேயே பல புகழ் வாய்ந்த பதவிகள் அவரை தேடிவந்தன.
அவர் தாலுக்கா போர்டு உறுப்பினராக 9 ஆண்டுகளும், ஜில்லா போர்டு உறுப்பினராக 14 ஆண்டுகளும், ஜில்லா போர்டு துணைத்தலைவராக 3 ஆண்டுகளும், ஜில்லா போர்டு தலைவராக 6 ஆண்டுகளும் பதவி வகித்தார்.
பின்னர் நெல்லிக்குப்பம் பேரூராட்சி மன்ற தலைவராக இருபது ஆண்டுகள் பணிசெய்தார். அதன் மூலம் அந்த ஊரைச் செம்மைப்படுத்தி, அங்கிருந்த கரும்பு ஆலை நன்கு வளர்ச்சி பெறும் வகையில் சூழ்நிலையை உருவாக்கினார்.
கடலூரின் நகராட்சி உறுப்பினராக 3 ஆண்டுகள் செயலாற்றி அதன் பின் கடலூர் நகராட்சித் தலைவராக 3 ஆண்டுகள் பதவியில் இருந்தார். அவ்வயமத்தில் கடலூர் நகரின் வளர்ச்சிக்கு பெருமுயற்சி எடுத்து பொறுப்பறிந்து செயலாற்றினார்.
மேலும் மாவட்ட அறநிலைய பாதுகாப்புக்குழுத் தலைவராகவும், தென்னாற்காடு மாவட்ட கூட்டுறவு வங்கி இயக்குனராகவும் 5 ஆண்டுகள் மிகச்சிறந்த வகையில் நிர்வாகம் செய்தார்.
ரயில்வே போர்டு தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் என்று பல பதவிகள் அவரால் பெருமை பெற்றது.
ஜம்புலிங்க முதலியார் அவர்கள் எந்தப் பதவியில் இருந்த போதும், அதன் வழியாக பல இனமக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதிலும், எண்ணற்ற குடும்பங்களுக்கு வாழ்வளிப்பதையும் ஒரு கடமையாகக் கொண்டார்.
அரசியல் பணி, பொதுப்பணிப் பொறுப்புகள் இவைகளோடு மட்டும் இல்லாமல், சிறந்த ஆன்மீகத்தில் அழுத்தமான நம்பிக்கை பெற்றவராகவும் விளங்கினார். அறநிலையக்குழு தலைவராக இருந்த போது திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்து அக்கோயிலின் வளர்ச்சிக்குப் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார்.
     ஜம்புலிங்க முதலியார் அவர்களின் சமூகப் பணி அத்துடன் நின்றுவிடவில்லை.
¨       தில்லையில் ஆதி திராவிடத் தலைவர் சுவாமி சகஜாநந்தாவிற்கு பள்ளி துவக்க பல உதவிகளைச் செய்தார்.
¨       புவனகிரியில் வெள்ளாற்றிற்குப் பாலம் அமைக்க அரசினை அணுகி வெற்றி பெறச்செய்து பாலம் கட்ட உறுதுணை புரிந்தார்.
¨       மாவட்டத்தின் பல பகுதிகளில் கல்வி வளர்ச்சிக்காக பல நிலைப் பள்ளிகளை அமைக்க முயற்சி மேற்கொண்டார்.
¨       நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியின் உப்பு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி உணவுப் பொருட்களை விளைவித்தார்.
இப்படி பொதுநலப் பண்பாளராக இருந்த ஜம்புலிங்க முதலியார் அவர்களை தென்னாற்காடு மாவட்ட வரலாற்றில் நீங்கா இடம் பெறச்செய்த நிகழ்வு 1932-33ம் ஆண்டில் நடைபெற்றது. தனது நிலத்தில் விவசாயத்திற்கென சுமார் 280 அடி ஆழம் போர்வெல் போட்டபோது தண்ணீருடன் கரி கலந்து வருவதைக்கண்டார். அதன் மூலம் பூமிக்கடியில் பழுப்பு நிலக்கரி படிவங்கள் இருப்பதைக் கண்டறிந்து, திரு. ஹெச். கே. கோஷ் மூலமாக, பெருந்தலைவர் காமராசர், பாரதப் பிரதமர் பண்டித நேரு அவர்களுக்குத் தெரிவித்தார். அதன் மூலம் மேலும் பல ஆய்வுகள் நடக்க வழிவகை செய்தார். ஆய்வு செய்ய வந்த அலுவலர்கள் அனைவருக்கும் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
இன்றைய நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்க தனது 600 ஏக்கர் நிலத்தினை தானமாகக் கொடுத்து பழுப்பு நிலக்கரி தோண்டியெடுக்க முழுமுதற் காரணமாக அமைந்த திரு. ஜம்புலிங்க முதலியார் அவர்களின் அளப்பரிய தியாகம் என்றென்றும் நினைவுறுத்திப் பாராட்டத்தக்கது.

நெய்வேலி பழுப்பு நிலைகரி நிறுவனம் உருவாக விதை ஊன்றிய வித்தகர் ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் அவர்கள் 10-10-1970 அன்று இயற்கை எய்தினார். அவரின் மறைவு செய்தி அறிந்ததும் தந்தை பெரியார் அவர்கள் விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினார்.

என்.எல்.சி. நிறுவனம், அன்னாரின் திரு உருவச்சிலையை  நெய்வேலி டவுன்ஷிப் டபுள் பிரிட்ஜ் அருகில் அமைத்து, என்.எல்.சி. நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குனருமான திரு. சுரேந்தர் மோகன் அவர்களின்   கரங்களால் அன்னாரின் சிலையை 26.02.2013 அன்று திறந்துவைத்து அன்னாருக்கு பெருமை சேர்த்தது.

நன்றி: ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் கல்வி அறக்கட்டளை