நமது ஜனநாயக தொழிற்சங்க மையத்தின்(DTUC) மாநில தலைவர் தோழர் ஜே.சிதம்பரநாதன் நெய்வேலி வருகை



நமது ஜனநாயக தொழிற்சங்க மையத்தின்(DTUC) மாநில தலைவர் தோழர் ஜே.சிதம்பரநாதன் 26-11-2011 அன்று நெய்வேலிக்கு வருகைதந்தார். நமது சங்கத்தலைவர் தோழர் எம்.செல்வராஜ் மற்றும் சங்கப்பொருப்பாளர்களோடு உரையாடினார். ஊழலுக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராகவும் பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் போராடிவரும் சங்கப்பொருப்பாளர்களை பாராட்டினார். நமது சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நன்கொடையும் நல்லாதரவும் வழங்கி முன்னுதாரணமாகத் திகழும் என்.எல்.சி. பணியாளர்களுக்கு தனது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.  

நமது சங்கப்பொருப்பாளர்கள் மீது என்.எல்.சி. நிர்வாகத்தின் தொழிலாளர்விரோத, பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, நமது சங்கம் சார்பாக மத்திய உதவி தொழிலாளர் ஆணையாளர் அவர்கள் முன் எழுப்பப்பட்ட தொழில் தகராறு மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது


நமது சங்கப்பொருப்பாளர்கள் மீது என்.எல்.சி. நிர்வாகத்தின் தொழிலாளர்விரோத, பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, நமது சங்கம் சார்பாக 01.06.2011 அன்று மத்திய உதவி தொழிலாளர் ஆணையாளர் திரு.பி.சிவராஜன் அவர்கள் முன் தொழில் தகராறு எழுப்பப்பட்டது.(விரிவான அறிக்கையை 09.11.2011ல் வெளியிடப்பட்ட முந்திய செய்தியில் காண்க).  சமரச பேச்சுவார்த்தை கடந்த 6 மாதங்களாக சென்னை, புதுச்சேரி மற்றும் இறுதியாக 23.11.2011 அன்று நெய்வேலியிலும்  நடைபெற்றது. நமது சங்கத்தின் சார்பாக தலைவர்,பொதுச்செயலாளர்,செயலாளர் தோழர் பி.ராமலிங்கம் மற்றும் துணைத்தலைவர் தோழர் என்.கென்னடி ஆகியோரும் என்.எல்.சி. நிர்வாகத்தின் சார்பாக மனிதவளத்துறை/ தொழிலுறவுத்துறை பொதுமேலாளர் திரு.கே.பெரியசாமி , துணைத் தலைமை மேலாளர் திரு. .எஸ். அறிவு மற்றும் துணைமேலாளர் திரு.கார்த்திக் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.  மத்திய உதவி தொழிலாளர் ஆணையாளர் அவர்களும் என்.எல்.சியின் மனிதவள இயக்குனர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்; நேரில் சந்தித்துப்பேசினார். முடிவு எதுவும் எட்டப்படாததால், மேற்படி தொழில் தகராறு மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது.

புதுச்சேரியில் மத்திய உதவி தொழிலாளர் ஆணையாளர் பதவியேற்பு

                                                                           
ஒவ்வொரு முறையும் சமரச பேச்சுவார்த்தைக்கு சென்னை சென்றுவர சிரமமாகவிருப்பதால் மத்திய தொழிலாளர் ஆணையாளர் அலுவலக கிளையை நெய்வேலியில் துவங்க வேண்டுமென நீண்டகாலமாக நமது சங்கம் கோரிவந்தது. நமது கோரிக்கை நிறைவேறும்வகையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்,  புதுச்சேரியில் மத்திய உதவி தொழிலாளர் ஆணையாளர் அலுவலகம் திறக்கஉத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஏற்கனவே சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தில் நெய்வேலி உள்ளிட்ட, புதுச்சேரி மற்றும் திருச்சி  பகுதிகளின் மத்திய உதவி தொழிலாளர் ஆணையாளராக பணியாற்றிய திரு.பி. சிவராஜன் அவர்கள் புதுச்சேரி மத்திய தொழிலாளர் அமலாக்க அதிகாரி அலுவலகத்தில்,  16.11.2011 அன்று நெய்வேலி உள்ளிட்ட, புதுச்சேரி மற்றும் திருச்சி பகுதிகளின் மத்திய உதவி தொழிலாளர் ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.   அவரை, சமரசபேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த      நமது பொதுச்செயலாளர் தோழர். இரா.இரவிச்சந்திரன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

எ.ன்.எல்.சியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு.ஏ.ஆர். அன்சாரியை சி.பி.ஐ விசாரிக்க பெறப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!


என்.எல்.சியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு..ஆர். அன்சாரி என்.எல். சியின் வரவு-செலவு அறிக்கையில் ரூ.10,000 கோடி முறைகேடு செய்துள்ளதாக  சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நமது சங்க தலைவர் தோழர் செல்வராஜ் தொடுத்த வழக்கில், திரு..ஆர். அன்சாரியை சி.பி.ஐ விசாரிக்க தரப்பட்ட உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளார் திரு. .ஆர். அன்சாரி. அத்தடையை நீக்கக்கோரி நமது சங்க தலைவர் தோழர் செல்வராஜ் தொடுத்த வழக்கு (Cr.MP.2/2011 in Cr. Revision 917/2011)  சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் விரைவில் விசாரிக்கப்படவிருக்கிறது.