நெய்வேலியில் 30.12.2011 அன்று வீசிய “தானே” புயலால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 75 சதமானம் மரங்கள் விழுந்துகிடக்கின்றன. என்.எல். சி. நிறுவனத்தால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக பணியாளர்களே கட்டிக்கொண்ட விரிவாக்கங்களின் பெரும்பான்மையானவை கூறை தகடுகள் பறந்தும், கிழிந்தும், இடிந்தும் கிடக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ளன. இதனால் ஒவ்வொரு பணியாளருக்கும் ரூ.10,000 முதல் 5 லட்சம் வரை நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது. என்.எல்.சி. நிறுவன தலைவர் மற்றும் இயக்குனர்கள் வீடுகள் தவிர அனத்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் அலுவலகங்களில் மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டது. குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
மரங்களால் ஏற்பட்ட சாலைதடைகள் இரண்டே நாட்களில் அகற்றப்பட்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது. குடிநீர் விநியோகம் 2 நாட்களில் சீரமைக்கப்பட்டது.
ஆனால் வீடுகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற நிர்வாகம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. பணியாளர்களே ரூ. 3000 முதல் 10,000 வரை செலவு செய்து மரங்களை அகற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நெய்வேலி நகரியத்தின் பெரும்பகுதி, மற்றும் மந்தாரக்குப்பம், கங்கைகொண்டான் காலனி பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன. விரிவான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல், மிகக்குறைவான பணியாளர்கள், மின்கம்பங்கள் பற்றாக்குறை காரணமாக சீரமைப்புபணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்காளாகி அவதிப்படுகின்றனர். சில இடங்களில் தொழிலாளர்களே ஒன்றுகூடி தங்களின் தெருக்களில் உள்ள மின் இணைப்புகளை சீர்செய்கின்றனர். சில இடங்களில் வீட்டிற்கு ரூ. 50 முதல் 150 வரை வசூல் செய்து வெளியாட்கள் மூலம் சரிசெய்து வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகளின் வீடுகளும் இருளில் மூழ்கியுள்ளன.
என்.எல்.சி. நிர்வாகம் மெத்தனப்போக்கை கைவிட்டு போர்க்கால அடிப்படையில் மின்இணைப்புகளை உடனடியாக சீரமைக்கவும், வீடுகளில் விழுந்துகிடக்கும் மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்கவேண்டும் எனவும் என்.எல்.சி. ஒர்க்கர்ஸ் சாலிடாரிடி யூனியன் கேட்டுக்கொள்கிறது.