அலுவலக நேரத்தை அதிகப்படுத்தும் என்.எல்.எல்.சி நிர்வாகத்தின் நடவடிக்கை ஏற்க தக்கதா? இல்லையா? என விசாரித்து தீர்ப்பளிக்குமாறு மத்திய அரசு தொழிலாளர் தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நீதிமன்றத்திற்கு மத்திய அரசு உத்தரவு


08.02.2011 முதல் அலுவலகப் பணிநேரத்தை 09.00 மணி முதல் 5.30 மணி வரை என மாற்றியமைக்கப்போவதாகவும், நடைமுறையில் உள்ள நிர்வாக விடுமுறை நாட்களை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக 9 சம்பளத்துடன்கூடிய விடுப்பை வழங்குவதாகவும் சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களின் உற்பத்திப்பிரிவுகளில் 7 ரிலே வேலை முறையை 01.04.2012 முதல் நடைமுறைப்படுத்தப்போவதாகவும் என்.எல்.சி. நிர்வாகம்  05.02.2012 அன்று தன்னிசையாக அறிவித்தது.
     இவ்வறிவிப்பு தொழில் தகராறு சட்டம், 1947, பிரிவு 9ஏ வின்படி சட்டவிரோதமானது என நமது சங்கத்தின் சார்பாக எதிர்ப்பு தெரிவித்து மண்டல தொழிலாளர் ஆணையாளர், சென்னை அவர்களிடம் எதிர்ப்பு தெரிவித்தோம். தொழிலாளர் ஆணையாளர் அவர்களின் அறிவுரையை ஏற்று நிர்வாகம் அனைத்து பதிவு பெற்ற சங்கங்களுக்கும் சட்டப்படி  9ஏ நோட்டீஸ் வழங்கி மேற்படி மாறுதல்களை அலுவலகப்பகுதிகளுக்கு மட்டும் 01.03.2011 முதல் நடைமுறைப் படுத்தப்போவதாக அறிவித்தது.
     அவ்வறிவிப்பை எதிர்த்து மண்டல தொழிலாளர் ஆணையாளர், சென்னை அவர்களிடம் 23.02.2011 அன்று நமது சங்கத்தின் சார்பாக தொழில் தகராறு எழுப்பினோம்.
     மத்திய தொழிலாளர் உதவி ஆணையாளர், சென்னை அவர்கள் முன்னிலையில் நமது சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தை 15.03.2011 முதல் 05.07.2011 வரை பல்வேறு நாட்களில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவு எதுவும் எட்டப்படாமல் முறிவு ஏற்பட்டு முறிவறிக்கை மத்திய அரசின் முடிவுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
       மேற்படி தொழில் தகராறு முடிவடையாத நிலையில் சமரச பேச்சு வார்த்தை நிலுவையில் இல்லை என காரணம்கூறி 18.08.2011 முதல்  மேற்படி அலுவலக நேர மாற்றத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக நிர்வாகம் 12.08.2011 அன்று சட்ட விரோதமாக அறிவித்தது.
உடனே நமது சங்கம், மேற்படி அலுவலக நேர மாற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது என்.எல்.சி நிர்வாகம் நடைமுறைப்படுத்த முயற்சிப்பது  தொழில் தகராறு சட்டம், 1947, பிரிவு 33ஏ வின்படி  சட்டவிரோதமானது எனவும் பிரிவு 33ன்படி என்.எல்.சி. நிர்வாகத்திற்கு தண்டனை வழங்குமாறும் மேற்படி மாற்றத்தை நடைமுறைப்படுத்துதலை கைவிடுமாறு நிர்வாகத்திற்கு அறிவுறுத்துமாறும், மத்திய   தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக செயலாளரிடம் புகார் செய்ததது.
அலுவலக நேரத்தை அதிகப்படுத்தும் என்.எல்.எல்.சி நிர்வாகத்தின் நடவடிக்கை ஏற்க தக்கதா? இல்லையா? என விசாரித்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பளிக்குமாறு மத்திய அரசு தொழிலாளர் தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நீதிமன்றத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
     மேற்படி வழக்கில் நமது தரப்பில் வாதிட வழக்குரைஞர் திரு. அஜாய் கோஷ் அவர்களை நமது சங்கம் நியமித்துள்ளது.